வ.ரா., என்று அறியப்படும் வ.ராமசாமி அய்யங்கார் (1889-1951) மிகப் பழமையான நம்பிக்கைகளை கொண்ட குடும்பத்தில் பிறந்து, புதுமையான எண்ணங்களோடு வாழ்ந்தவர்.நாட்டு விடுதலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு முற்போக்குச் சிந்தனையாளராகவும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரராகவும் விளங்கினார்.
வ.ராமசாமி ஐயங்கார் (வ.ரா) (செப்டெம்பர் 17, 1889 - ஆகஸ்ட் 29, 1951) தமிழில் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இதழியலாளர். சுதந்திரபோராட்ட வீரர். சமூக சீர்திருத்தவாதி. சுப்ரமணிய பாரதியின் மாணவர், அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.
வ.ரா தஞ்சை மாவட்டத்தில் திங்களூர் என்ற சிற்றூரில் செப்டெம்பர் 17, 1889-ல் வரதராஜ ஐயங்காருக்கும் பொன்னம்மாளுக்கும் பிறந்தார். உத்தமதானபுரத்தில் உள்ள திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். எட்டுவயதில் திங்களூரிலும் பின்னர் திருவையாற்றிலுள்ள சென்ட்ரல் உயர்நிலைப்பள்ளியிலும் மேற்படிப்புப் படித்தார். தஞ்சாவூரில் உள்ள புனித பீட்டர் கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ. பயின்றார். தேர்வில் தோல்வியுற்ற வ.ரா. கல்கத்தாவில் உள்ள சுரேந்திரநாத் பானர்ஜி நடத்தி வந்த தேசியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். ஆனால் கல்கத்தா சென்றும் தகுந்த பரிந்துரை இல்லாமையால் அங்கு கல்லூரியில் சேர இயலாமல் ஊர் திரும்பினார்.
வ.ரா 1938-ல் வீரகேசரி இதழின் ஆசிரியராக இலங்கை சென்றபோது அங்கே சந்தித்த பஞ்சாபியைத் தாய்மொழியாகக் கொண்ட புவனேசுவரியை மணந்தார். இவரது முதல் மகன் இரண்டரை வயதிலும், இரண்டாவது மகன் பிறந்த சில நாட்களுக்குள்ளும் இறந்து போயினர்.